எந்த இடத்திலும் அல்ஜிப்ரா என்ற வார்த்தையே சொல்லாதீர்கள்.
"அல்ஜிப்ராவை எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவது ? “
ரொம்ப சிம்பிள். இந்த டெக்னிக்கை செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டு சிறாருக்கு Ascending Order மற்றும் Descending Order நன்றாக தெரியுமா?
Ascending Order என்றால் சிறியதில் இருந்து பெரியதற்கு வரிசைப்படுத்துவது.
O, 8, 6 , 5 என்ற எண்ணை Ascending Order யில் எழுது என்றால் அதை 0,5,6,8 என்று எழுத வேண்டும்.
Descending Order என்றால் பெரியதில் இருந்து சிறியதை நோக்கி வரிசைப்படுத்துவது.
O, 8, 6 , 5 என்ற எண்ணை Descending Order யில் எழுது என்றால் அதை 8,6,5,0 என்று எழுத வேண்டும்.
இந்த இரண்டும் நன்றாக செய்யும் மாணவரிடம் இது போல சில கணக்குகளை கொடுங்கள்.
அவர் உற்சாகமாக செய்வார்.
அடுத்து N, N+1 , N+5 , N-3, N - 4 என்று எழுதி அதை அசெண்டிங் மற்றும் டிசண்டிங் ஆர்டரில் எழுத சொல்லுங்கள்.
இதுவரை எண்களையே தன்னம்பிக்கையாய் எழுதிக் கொண்டிருந்தவர்கள் லேசாக திகைப்பார்கள்.
இப்போது பேனாவை எடுத்து
N
N+1
N+5
N-3
N-4
என்று எழுதிக் கொள்ளுங்கள்.
“சரி இப்ப N எங்க எல்லாம் இருக்கோ அங்க சும்மா ஒரு நம்பரை நாமளே போடலாம்... ம்ம்ம் “10” போட்டுக்கலாம்.
அப்போ N = 10 , N+1 = 11 , N+5 = 15, N-3= 7, N-4 = 6
இப்போ 10,11,15,7,6
இதை எல்லாம் அசெண்டிங் ஆர்டர்ல எழுது
6,7,10,11,15
சூப்பர்... இப்ப அங்க பாரு 6 க்கு நேரே என்ன இருக்கு N-4 இருக்கு, அதை ஆறுக்கு பதிலா எழுது
அப்ப N-4 , N-3, N, N+1, N+5 இதுதான் அசெண்டிங் ஆர்டர் இதுக்கு” என்று சொல்லலாம்.
இந்த N=10 என்பதிலேயே வைத்துக் கொண்டு இன்னும் சில N வரிசைகளை கொடுங்கள். ஆரம்பத்தில் நெகட்டிவ் நம்பர்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் சிறார்கள் அப்போது Integers பக்கம் வந்திருக்க மாட்டார்கள்.
அதன் பிறகு N =10 மாதிரி அந்த இடத்தில் N = Any number போட்டாலும் அதே மாதிரிதான் வரிசை வரும் என்பதையும் சொல்லிக் காட்டுங்கள்.
எந்த இடத்திலும் அல்ஜிப்ரா என்ற வார்த்தையே சொல்லாதீர்கள்.
ஒரு விளையாட்டு போல சொல்லிக் கொடுங்கள்.
இந்த புராஜெக்ட்டுக்கு அதாவது உங்கள் பிள்ளைக்கோ மாணவருக்கோ இது மாதிரி அல்ஜிப்ரா சொல்லித்தந்து அவர்களுக்கு அதை புரிய வைக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். ஆகவே ஆசிரியர்களும் பெற்றோர்களும் அந்த பொறுமையுடன் இயங்குங்கள்.
நீங்கள் கல்வியாளர்களும், அறிஞர்களும் சொல்லும் காலத்துக்கு முன்னரே உங்கள் பிள்ளைக்கு அல்ஜிப்ராவை அறிமுகப்படுத்துகிறீர்கள் என்பதால் அது திணித்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் ரொம்ப ரொம்ப பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
“எல என்னல N-4 , N-3, N, N+1, N+5 எப்படி வரிசைப்படுத்துறதுன்னு சொல்லிதந்தேம்லால, உனக்கு சென்னா ஒண்ணும் மனசலாகாதால தப்ளையா” என்று எரிந்து விழுந்து விடக் கூடாது.
பொறுமை பொறுமை பொறுமை. மாபெரும் பொறுமை வேண்டும்.
அப்படி செயல்பட்டால் உங்கள் பிள்ளைகளோ மாணவர்களோ ஒரு புதிய விஷயத்தை சிறுவயதிலேயே உணர்ந்து கொள்வார்கள்.
அல்ஜிப்ராவை கற்றலை விட, உணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த உணர்வை ஏற்படுத்தவே நான் மேலே சொன்ன முறை.
ஜஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க. சரியா செட் ஆகலன்னா அப்படியே இந்த ஐடியாவை தூக்கிப் போட்டுவிடலாம்.
காரணம் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு மாதிரி.
ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு 25 சதவிகிதம் அவர்களுக்கு புரிந்தாலும், பிற்காலத்தில் அவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும்.
நான் மகள் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வெளியே சாக்லேட் வாங்கப் போகும் போதெல்லாம் இரண்டு நிமிடம் X + 1 = 5 , அப்படியானால் X யின் மதிப்பு என்ன என்று கேட்பேன்.
தெரியாது என்பாள்.
“இப்ப இந்த சாக்லேட் விலை 4 ரூவா... நான் இது கூட ஒரு ரூபாய் அதிகமாக்கி சொல்றேன். அப்ப எவ்ளோ ரூபா அது”
“அஞ்சு ரூபா”
“அது எப்படி’
“ஆமா நாலு + ஒண்னு = அஞ்சு
”சரி எனக்கு சாக்லேட் விலை தெரியாதுன்னு வைச்சிக்க. ஒரு சாக்லெட் அதோட விலை தெரியாது. ஆனா அதோட ஒண்ணை கூட்டினா அதோ மதிப்பு அஞ்சு. அப்போ சாக்லேட்டோட விலை என்னது”
“ஒண்ணக் கூட்டினா அஞ்சு.. அப்போ உண்மையான் விலை நாலு”
“அதான் எப்படி”
“தெரியல போடா... செம்ம கடுப்பா இருக்கு. நான் அம்மாகிட்ட சொல்வேன். நீங்க திணிக்கிறீங்கன்னு”
“சரி சரி ப்ரியா விடு” என்று பேச்சை மாற்றிவிடுவேன். ஆனால் மாதம் ஒருமுறை இந்த டாப்பிக் வெவ்வேறு ரூபத்தில் எடுப்பேன்.
குறிப்பிட்ட சமயத்தில் முதல் கணக்கை மெல்ல தீர்க்கத் தொடங்கியவள், சர சரவென்று அல்ஜிப்ரா நுட்பத்தை பிடித்துவிட்டாள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் சும்மா முயற்சித்து பாருங்கள். தப்பில்லை.
Comments
Post a Comment